ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான பொது நலன் மனு: 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான பொது நலன் மனு: 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு வரும் 10-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது.இதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்நிலையில் வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், காங்கிரஸ் அரசில் நிர்ணயிக்கப்பட்ட விலை, பாஜக அரசில் நிர்ணயம் செய்யப்பட்ட விலை ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.மேலும், மற்றொரு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கும் ரபேல் போர் விமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் நடந்துள்ளது. ஆதலால் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கு முன், ஏன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த அனைத்து மனுக்களும் வரும் 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் முன் விசாரணைக்கு வருகிறது.

0 Comments 0 Comments
0 Comments 0 Comments